பழைய கோப்புகள் மீண்டும் விசாரணைக்கு வரும் – வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வலியுறுத்து!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளிட்ட கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான பழைய கோப்புகள் அனைத்தும் மீண்டும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் வழக்குகள் தற்போது புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு தினசரி அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் இவ்வாறான பல கோப்புகள் மூடி மறைக்கப்பட்டிருந்தன. வெறும் பெயரளவில் மாத்திரமே விசாரணைகள் பற்றி பேசப்பட்டது. இவற்றுக்கு நீதி பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கி சிலர் ஆட்சிப் பீடமும் ஏறினர். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் மலர்ந்த போது, இந்த நீதியை நிலைநாட்டுவதற்காகவே மக்கள் மிகப்பாரிய மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர்.

2015ஆம் ஆண்டு வரை நீடித்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருந்த கடுமையான அதிருப்தி மற்றும் கோபத்தின் காரணமாகவே அந்த மக்கள் ஆணை கிடைத்தது. ஏனெனில், அது ஒரு அடக்குமுறை மற்றும் பயங்கரவாத அரசாங்கமாகவே செயற்பட்டது. மக்கள் பொது வீதிகளில் படுகொலை செய்யப்பட்டனர்.

முக்கியமாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக உரிமைகள் பற்றி பேசும் அமைப்புகளிடம் நான் இப்போதும் கேட்கிறேன், உங்களுக்கு அந்த கடந்த கால வரலாறு மறந்துவிட்டதா? பட்டப்பகலில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், சிலர் நாட்டை விட்டு வெளியேறினர், சிலரது கை, கால்கள் உடைக்கப்பட்டன, வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்டனர்.

இவற்றுக்குச் சரியான முறையில் நீதியை நிலைநாட்டுவதற்கான மிக நெருக்கமான அதிகார பலம் நல்லாட்சி அரசாங்கத்துக்குக் கிடைத்தது. ஆனால், நல்லாட்சி அரசாங்கம் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, பழைய பாதையிலேயே பயணிக்கத் தொடங்கியது.

அதேபோன்று, ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கான மிகச்சிறந்த மக்கள் ஆணை நல்லாட்சி அரசாங்கத்துக்கு இருந்தது. ஆனால், அதிலும் அவர்கள் தோல்வியடைந்தனர்.

இதன் காரணமாக, மிகப்பாரிய சட்ட சீர்திருத்தங்களையும் நல்ல மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு மிகப்பாரிய பொறுப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பல வருடங்கள் பழமையான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வது என்பது இலகுவான காரியம் அல்ல. நீதி நிலைநாட்டப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகள்