புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஜெனிவாவில் வியாழக்கிழமை (28) நடைபெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் 42ஆவது கூட்டத்தின்போதே இத்தெரிவு இடம்பெற்றது.
இத்தெரிவை அடுத்து கருத்துரைத்த பிரசாத் காரியவசம், தன்னை ஏகமனதாக தெரிவுசெய்தமைக்காக குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதேபோன்று சமகாலத்தில் மனித உரிமைகள் முகங்கொடுத்துவரும் சவால்கள் மற்றும் வளக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இக்குழுவின் எதிர்காலப் பணிகளில் ஒரு மூலோபாய அணுகுமுறைகயைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய பதவிக்காலத்தைப் பொறுத்தமட்டில் கடந்த 2023 ஜுன் மாதம் முதல் இக்குழுவில் அங்கம்வகித்துவரும் பிரசாத் காரியவசம், தற்போதைய தெரிவின் பிரகாரம் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவார்.
ஏற்கனவே அவர் 2004 ஆம் ஆண்டு இக்குழு நிறுவப்பட்டபோது அதன் ஆரம்பத் தலைவராகப் பணியாற்றியதுடன், நான்கு தடவைகள் இக்குழுவில் உறுப்பினராக அங்கம்வகித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு என்பது 14 சுயாதீன நிபுணர்களைக்கொண்ட ஒரு கட்டமைப்பாகும். இது மிகமுக்கிய சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் ஒன்றான ‘சகல புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை’ நாடுகளால் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கிறது.




