பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 22 பௌத்த துறவிகள் கைது செய்யப்பட்டமை மற்றும் அதனுடன் தொடர்புடைய பாரிய போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து, இலங்கையின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றின் ஊடாகத் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 1.1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் 22 பௌத்த துறவிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்த அதிர்ச்சித் தரத்தக்கச் சம்பவத்தைத் தொடர்ந்தே மகாநாயக்க தேரர்களின் இந்த அவசர அறிக்கை வெளியாகியுள்ளது.
துறவிக் கோலத்தில் இருந்து கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதானது பௌத்த சாசனத்திற்கு எதிரானது மற்றும் முற்றிலும் சட்டவிரோதமானது என மகாநாயக்க தேரர்கள் கடுமையாகச் சுட்டிகாட்டியுள்ளனர்.
துறவிகள் என்ற போர்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையான விசாரணைகளை நடத்தி, அவர்களை பௌத்த ஒழுங்கிலிருந்து நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இளம் துறவிகளை இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்குத் தூண்டுபவர்கள் மற்றும் அவர்களை இதற்காகப் பயன்படுத்துபவர்கள் குறித்து பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.




