மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம்!

பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம்  அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காகப் பெற்றோர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க தலைமையில், வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று விசேட விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தலைக்கவசம் இன்றித் தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி வந்த பெற்றோர்கள் மறிக்கப்பட்டு, அவர்களுக்கு  ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

அத்துடன், சிறுவர்களுக்கு தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டன.