யால தேசிய பூங்காவிற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறி நடந்துகொண்ட ஐந்து சுற்றுலாப்பயணிகள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
யாலா தேசிய பூங்காவின் ‘சுது வெலிமுல்ல’ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு சென்றிருந்த இரண்டு ஜீப் வண்டிகளில் இருந்த குழுவினர், பூங்காவின் விதிகளுக்கு முரணாக வாகனங்களில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதை அடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யால பூங்காவிற்குள் ஜீப் வண்டி சாரதி ஒருவரோ அல்லது வேறு எவரேனுமோ சட்டங்களை மீறினால், அவர்களைக் கைது செய்வதற்கும், சம்பந்தப்பட்ட ஜீப் வண்டிகளுக்கு சவாரி சேவைகளைத் தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என யால ஜீப் வண்டி சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகளுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.



