யாழ்.மாவட்டத்தில் அண்மைய நாட்களாக நாய்களிடையே பரவும் கேனைன் டிஸ்டம்பர் என்ற வைரஸ் தொற்றால் ஏராளமான நாய்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைரஸ் காற்றின் மூலமாக நாய்களில் பரவுகிறது. வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நாய்களைக் காப்பாற்ற முடியாது. எனினும், தடுப்பூசிகளைச் செலுத்துவதன் மூலம் குறித்த வைரஸிலிருந்து தமது செல்லப் பிராணிகளை காப்பாற்ற முடியுமென விலங்குநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மேற்படி வைரஸ் நோய்த் தாக்கத்தால் நாய்கள் உயிரிழக்கின்ற போதிலும் கால்நடைத் திணைக்களம் போதிய விழிப்புணர்வையோ அல்லது தடுப்பூசித் திட்டங்களையோ மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக வடக்கு மாகாணக் கால்நடைத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.வசீகரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த வைரஸைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் கால்நடைத் திணைக்களத்திடம் இல்லை. எனினும், வீடுகளில் கட்டி வளர்க்கப்படும் நாய்களுக்கு குறித்த வைரஸ் பரவுவதில்லை. இதுதொடர்பாக ஓரளவுக்கு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் தமது வளர்ப்பு நாய்களுக்கு ஒழுங்குமுறையாகத் தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலமும், வீதிகளில் விடாமல் வீட்டுச் சூழலியே பராமரிப்பதன் மூலமும் தமது செல்லப் பிராணிகளை குறித்த வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் குறிப்பிட்டார்.





