வெள்ளை வான்களில் நடந்த கொடூரங்கள்.. சிறிலங்கா சபையில் ஜனாதிபதி விடுத்த கடும் எச்சரிக்கை!

தங்கள் சொந்தக் குடும்பம் மற்றும் சொந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட குற்றங்கள் தான் தாஜுதீனின் மரணம் போன்றவையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிவரும் அவர், “இராணுவத்திலோ அல்லது புலனாய்வுத் துறையிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், அரசின் நலனுக்காக என்ற பெயரிலோ, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அதிகாரத்திற்காகவோ அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்திற்காகவோ சில காரியங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குப் பொருத்தமான தண்டனையை வழங்க எங்கள் அரசாங்கம் ஒருபோதும் தயங்காது.

தங்கள் சொந்தக் குடும்பம் மற்றும் சொந்த அரசியல் முகாமின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட குற்றங்கள் தான் தாஜுதீனின் மரணம் போன்றவையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் ஆகும்.

 

இதற்கெல்லாம் பின்னால், மிகச் சிறியதொரு அரச இயந்திரத்தின் இயக்குநர்கள் (operators) இருந்திருக்கிறார்கள். அதை நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டாமா?

நாட்டில் வெள்ளை வான்கள் பற்றிய பயம் இருக்கவில்லையா? தனது தோட்டம் இடிக்கப்படுவதை எதிர்த்த ஒருவர், இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வான்களில் கடத்தப்பட்டார்.

இவை சிவில் மோதல்கள் அல்ல. ஒரு சிறிய குழுவினர் தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக இந்த கொடூரமான கொலைகளைச் செய்துள்ளனர். இந்தக் கொடூரமான குற்றங்களுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு நாம் நிச்சயமாகக் கடமைப்பட்டிருக்கிறோம்” என குறிப்பிட்டார்.