ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலக் குழுத் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம் சரியான தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்காலக் குழுத் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டமை சரியான தீர்மானம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில்,

கிரிக்கெட் விளையாட்டை தற்போதைய நிலையிலிருந்து உயர்த்துவதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இரான் விக்ரமரத்ன தலைமையிலான குழுவினர் அந்த இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்பப்படுகிறது.

கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட, அனுபவம் மிக்க மற்றும் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட நபர்களை உள்ளடக்கிய ஒரு வலுவான குழுவே இம்முறை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா, மிக இணக்கமான முறையில் தனது பதவியிலிருந்து விலகியமை ஒரு நல்லுதாரணம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும், புதிய குழுவினர் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல தேவையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.

அரசாங்கம் என்ற ரீதியில் இது மிகச் சரியான தீர்மானம். கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி, மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு பலமான குழுவே நியமிக்கப்பட்டுள்ளது. எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட இந்த குழுவினர் இலங்கை கிரிக்கெட்டை ஒரு சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என நம்புகிறோம். ஷம்மி சில்வா மிகவும் சுமூகமான முறையில் பதவியை இராஜனாமா செய்து ஒரு முன்மாதிரியை வழங்கியுள்ளார். எனவே, இந்தப் புதிய குழுவினருக்குச் சுதந்திரமாகச் செயற்பட நாம் இடமளிப்போம் என்றார்.