பாஜகவுக்கு எதிராக பேசாத விஜய் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் தவெகவிற்குள் பாஜக நுழைந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்று திருச்சியில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் கூறினார்.
திருச்சியை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளருமான எம். கிறிஸ்டோபர் திலக், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு தெளிவு பிறக்கும். அடுத்த 10 நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்கும் எனவும் நம்புகிறேன்.
தவெகவிற்கு 35% வாக்குகளும், திமுகவிற்கு 30% வாக்குகளும் கிடைத்துள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை காட்டுகிறது. பாஜக தமிழகத்தில் காலூன்றகூடாது என்ற நோக்கில் மக்கள் வாக்களித்துள்ளனர்.மதச்சார்பின்மையை பாதுகாக்கும் அரசு அமைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தவெகவுக்கு வழங்கியுள்ளது. பாஜக காலூன்ற இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் சேர்ந்ததால் தவெகவிற்குள் பாஜகவால் நுழைய முடியாது. பாஜகவை எதிர்த்து விஜய் ஏன் பேசவில்லை என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிராக மக்கள் தவெகவிற்கு வாக்களித்து உள்ளதால் நாங்கள் அங்கு சேர்ந்துள்ளோம். தாங்கள் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்க வேண்டியது தவெகவினரின் கடமை.
ராகுல் காந்தியின் அடிப்படை நோக்கம் பாஜகவின் நகர்வுக்கு முன் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டை பாஜக சின்னாபின்னமாக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை தடுக்கவே நாங்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
அதை சரியாக பயன்படுத்த வேண்டியது தவெகவின் கடமை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வாக்குகள் மூலமாகத்தான் திமுகவில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். அதுபோல நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட வெற்றிபெற்ற அனைவரும் கூட்டணி கட்சி வாக்குகள் மூலமாகத்தான் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஆளும் கட்சியாக இருந்து தேர்தலை சந்தித்த திமுக வேட்பாளர்கள் பெருமளவில் பணம் செலவழித்து தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் விஜய் கட்சியில் உள்ளவர்கள் பெரும் செலவு செய்து போட்டியிடவில்லை. ஒரு சிலரை தவிர விசில் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யார் என்பது கூட மக்களுக்கு தெரியது. ஆனாலும் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
இதனால் செலவு செய்த பணத்தை திரும்ப எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இல்லை. எனவே இது ஊழலுக்கு வழிவகுக்காது. இதேபோல, ஆளும் கட்சியாக இல்லாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும், பொருள் செலவு செய்யாமல் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக்கூடாது என்பதற்காகதான் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் செய்தார். அதே போன்றுதான் காங்கிரஸும் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஏதேனும் குழப்பங்களை ஏற்படுத்தலாமா? என பாஜக முயற்சித்து வரும் நிலையில், அதனை முறியடிக்கும் விதமாகத்தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒரு நடிகருக்கான ரசிகர்கள் பட்டாளம் மற்றும் அரசுக்கு எதிரான மக்கள் நிலைப்பாடு போன்றவையும் தவெக வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஒரு “சீன் கிரியேட்” பண்ண வேண்டும் என்பதற்காக தான் ரஜினியும் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.





