மாகாண சபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் விசேட அவதானம் செலுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள அடிப்படை சட்ட சிக்கல் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி, அதற்கான தீர்வினை வெகுவிரைவில் முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவித்ததாவது,
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பதில் சட்ட சிக்கல் காணப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை வியாக்கியானம் அளித்துள்ளது. ஆகவே இந்த சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறோம்.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் தேர்தலை விரைவாக நடத்தலாம் என்றார்.



