அமெரிக்க வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை  நிருபர்கள் சங்க விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

“உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு ஆரம்பித்த  தருணத்தை இந்த காணொளி காட்சிகள் காட்டுவதாக அவர்வும் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டனில் உள்ள  ஹில்டன் ஹோட்டலில் நடந்த இந்த விருந்தின் போது, பாதுகாப்புச் சோதனை நடைபெறும் இடத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதனால் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மிக நெருக்கமான தூரத்திலிருந்து  மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் இரகசிய சேவை அதிகாரி ஒருவர், தான் அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கியினால் உயிர் தப்பினார். அந்த அதிகாரியுடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஒருவர் இரகசிய சேவை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த ஆண்டு விழாவில், இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்து எஃப்.பி.ஐ மற்றும் இரகசிய சேவை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு படுகொலை முயற்சி இதுவா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், ட்ரம்ப் மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகள் காயமின்றி பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.