மத்திய கிழக்கில் அமெரிக்க, இஸ்ரேல் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானியப் பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்திலுள்ள இரண்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தகர்க்கப்படும் வரை, அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களும் ‘இராணுவ இலக்குகளாகவே’ கருதப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

“அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தமது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழக வளாகங்களில் இருந்து குறைந்தது 1 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானிய கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் 30, செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கு முன்னர் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில், எந்நேரமும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழக கிளைகள் இந்த மிரட்டலால் நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இங்குக் கல்வி பயிலும் பல்லாயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தற்போது பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.