மன்னார் படகுத்துறை படுகொலை நினைவு நாள் 02.01.2007

மன்னார் மாவட்டம் இலுப்பக்கடவை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட படகுத்துறை எனும் கடலோர கிராமத்தில் சிங்கள வான்படை நடத்திய மிலேச்சத்தனமான கிபீர் விமானத் தாக்குதலில் அங்கிருந்த 35 வீடுகளும் அழித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன.

இதில் 9 வயது உட்பட ஏழு குழந்தைகள் ஒரு கர்ப்பணி அவரின் குழந்தை கணவர் உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த நாளான்று காலை 9.30 மணியளவில் கடலோரத்தை ஒட்டிய பகுதியில் சிங்களப்படையின் கிபீர் விமானங்கள் கண்மூடித்தனமாக 14 முறை குண்டுகளை வீசித் தாக்கின .

இந்தத் தாக்குதலில் காங்கிரீட்டால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டைத்தவிர அனைத்து குடிசைகளும் முற்றிலும் சேதம் அடைந்தன .அந்த வீடு மட்டும் பகுதியளவில் தப்பித்தது .

நிகழ்விடத்துக்கு அருகில் உள்ள மன்னாரில் இருந்து படகுத்துறைக்குச் சென்ற அவசர சிகிச்சை ஊர்திகளை உயிலங்குளம் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி மேற்கொண்டு போகவிடாமல் சிங்கள இராணுவம் தடுத்தது. இதனால் மிகமோசமாக காயமடைந்தவர்கள் முழங்காவில் மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து இலுப்பக்கடவையில் இருந்து 80km தொலைவைக் கடந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

கிளிநொச்சியில் இருந்து இலுப்பக்கடவைக்கு அனுப்பப்பட்ட இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளிலேயே காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் .

அதற்கு முன்பே படுகாயம் அடைந்த 03 குழந்தைகளும் ஒரு கர்ப்பணியும் அவரின் கணவரும் முழங்காவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.

கிபீர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை கண்டறிந்தார் .

அவரைத் தொடர்ந்து பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளும் படகுத்துறைகுச் சென்று பார்வையிட்டனார்
விமானத் தாக்குதலின் இலக்கு பு லிகளின் நிலையென அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்று ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டம் நாவாந்துறை மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் இருந்து 1995இல் இடம்பெயர்ந்து வந்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 231 பேரே படகுத்துறையில் வசித்து வந்தனர்.

அந்த இடத்தில் விடு தலைப் பு லிகளின் நிலைகள் எதுவுமே கிடையாது. இந்தத் தாக்குதல் அரச பயங்கரவாதமே என்றார் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் .

இச்சம்பவத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்

1:-அ.ஆனந்தி (வயது 32)
2:-அ.விதுசன் (வயது 04)
3:-அ.இராஜகுமாரி (வயது 57)
4:-அ.சத்தியப்பிள்ளை (வயது 26)
5:-கு.தயாழன் (வயது 02)
6:-கு.வலஸ்தீனா (வயது 30)
7:-ப.ஜமேசன் (வயது 12)
8:-ச.மதுசன் (வயது 01)
9:-உதயகுமார் (வயது 55)
10:-உ.மாலினி (வயது 27)
11:-உ.தர்சிகா (வயது 01)
12:-வி.வினோயன் (வயது 04)
13:-வி.தர்சினி (வயது 09)
14:-வி.விஜிதா (வயது 35)
15:-அ.குகன் (வயது 36)