சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பகிரங்கப்படுத்தும் போது அரச அதிகாரிகளின் விபரங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஒருசில வரையறைகளை விதிக்கும் வகையில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் திருத்தம் செய்யப்படும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை பார்வையிடுவதற்கு எவ்வித வரையறைகளும் விதிக்கப்படாது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. சட்டத்தின் 86 மற்றும் 88 ஆம் பிரிவின் பிரகாரம் மக்கள் பிரதிநிதிகள் முதல் அரச அதிகாரிகள் அனைவரும் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் பிரகாரம் கடந்த காலங்களில் 300 பேர் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வெளிப்படுத்தல்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்வைத்துள்ளனர். ஆவணங்கள் ஊடாக கோப்புக்கiளை கையளிக்கும் முறைமைக்கு மாறாக இலத்திரனியல் மத்தியமயப்படுத்தப்பட்ட முறைமைக்கு அமைய விபரங்களை சமர்ப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
இலத்திரனியல் மத்தியமயப்படுத்தப்பட்ட முறைமைக்கு அமைவாக இந்த ஆண்டு 160000 பேர் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்கள். சட்டத்தின் பிரகாரம் பொதுமக்கள் பிரவேசத்துக்காக இந்த விபரங்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெளிப்படுத்தப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை ஒருசில தரப்பினர் மற்றும் ஊடகங்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் திரிபுப்படுத்தி போலியான செய்திகளை வெளியிடுவதை அவதானிக்க முடிகிறது. ஆகவே விபரங்களை வெளிப்படுத்தும் போது ஒருசில வரையறைகளை கையாள்வதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்தது.
மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான விபரங்களையும், அவர்களின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் அறிந்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. இருப்பினும் அரச அதிகாரிகளின் தனிப்பட்ட விபரங்கள் தொடர்பான வெளிப்படுத்தலின் போது முழுமையான பிரவேசத்தை வழங்க வேண்டுமா என்பது குறித்து ஆராய வேண்டும். ஏனெனில் தனிப்பட்ட விபரங்களை கொண்டு அரச அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒரு தரப்பினர் செயற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தும் போது அரச அதிகாரிகளின் விபரங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு ஒருசில வரையறைகளை விதிக்கும் வகையில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் திருத்தம் செய்யப்படும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை பார்வையிடுவதற்கு எவ்வித வரையறைகளும் விதிக்கப்படாது என்றார்.





