ஈரான் உச்ச தலை​வர் காமேனியுடன் மோதல் இல்லை: அதிபர் மசூத் பெசெஷ்கியன் விளக்கம்

ஈரான் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனி​யுடன் மோதல் இல்லை என்று அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் ராணுவம் இணைந்து நடத்​திய வான்​வழி தாக்​குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​டார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ் தபா காமேனி புதிய உச்ச தலை​வராக பதவி​யேற்​றார்.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தாக்​குதலில் மொஜ்த​பா​வும் படு​கா​யம் அடைந்​தார். ஈரான் அதிப​ராக மசூத் பெசெஷ்கியன் பதவி வகித்தா​லும் மதத் தலை​வர் மொஜ்தபா காமேனியே ஆட்சி நிர்​வாகத்தை கவனித்து வரு​கிறார். இதனிடையே பலகட்ட பேச்​சு​ வார்த்​தைகளுக்​குப் பிறகு அமெரிக்​கா, ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. ஆனால் ஈரான் ராணுவம் தன்னிச்சை​யாக செயல்​பட்டு சரக்கு கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தால் அமெரிக்கா​வுடன் மீண்​டும் மோதல் உரு​வானது.

இந்த விவ​காரத்​தில் அதிபர் பெசெஷ்கியனுக்​கும் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனிக்​கும் இடையே கருத்து வேறு​பாடு​கள் நில​வுவ​தாகக் கூறப்​படு​கிறது. சில நாட்​களுக்கு முன்பு ஈரான் ராணுவம், அதிபர் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டிருப்​ப​தாக​வும் தகவல்​கள் பரவின. இந்த சூழலில் பெசெஷ்கியன் தொலைக்​காட்​சி​யில் நேற்று பேசி​ய​தாவது: சிரி​யா​வில் ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்​தி​யது போன்று ஈரானிலும் ஆட்சி மாற்​றத்தை ஏற்​படுத்த எதிரி​கள் (அமெரிக்​கா, இஸ்​ரேல்) திட்​ட​மிட்​டனர்.

48 மணி நேரத்​தில் ஈரானை வீழ்த்தி விடலாம் என்று அவர்​கள் கரு​தினர். ஆனால் எதிரி​களின் சதி​களை, தாக்​குதல்​களை ஈரான் வெற்​றிகர​மாக முறியடித்​தது. உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனி​யின் தலை​மை​யில் கீழ் ஒட்​டுமொத்த மக்​களும் ஓரணி​யில் திரண்டு நிற்​கின்​றனர். காமேனி​யின் வழி​காட்​டு​தல்​களால் எதிரி​களின் தாக்​குதல்​களை ஈரான் மக்​கள் துணிவுடன் எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.

தற்​போதைய சூழலில் அவரை நேரடி​யாக தொடர்பு கொள்​வது கடினம். எனினும் அவர் எழுத்​துப்​பூர்​வ​மாக அனை​வருட​னும் தொடர்​பில் இருக்​கிறார். எனக்​கும் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனிக்​கும் இடையே எவ்​வித மோதலும் இல்​லை. தற்​போதைய சூழலை பயன்​படுத்தி சிலர் வதந்​தி​களைப் பரப்பி வரு​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்துள்ளார்.