அராலி மேற்கு கடற்பரப்பில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (9) பகல் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த நபர் இன்றைய தினம் வழமை போல் கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், இன்று பகல் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை அந்தப் பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த பிற மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மீனவர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் சடலம் மீதான மரண விசாரணைகளை மேற்கொண்டார்.





