போராட்டத்துக்கும் ஒன்றியங்களுக்கும் தொடர்பு இல்லை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை. இவ்வாறான போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுடன் முன்னெடுக்கப்படுபவை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் இன்று வியாழக்கிழமை (09.07.2026) ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும், அதன் சமூகப் பொறுப்புணர்வுக்கும் எதிரான செயல்களால் தேசியத்தின் பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருகிறது.சட்டரீதியாக குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்காது சமூக ஊடகப் பரப்பினூடாக அவமதிப்பை உருவாக்கும் பிம்பங்களைக் கட்டவிழ்த்து சமூக ஊடகப் பதிவர்களே நீதவான்களாக உருவாகும் துரதிஷ்டவசமான நிலை தமிழ்ச் சமூகத்தின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு மாறானதும், எதிரானதுமாகும்.

சமூக ஊடகங்கள் வழியான அவமதிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராகச் சட்டத்தினதும், நீதியின் பாலானதுமான  முன்னெடுப்புக்களால் தம் மீதான அவதூறுகளைக் களைய முற்படும் ஆளுமைகளுக்கு மாணவர்ச் சமூகத்தின் ஆதரவு என்றுமுண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.