மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து, அது நிலையான தன்மையில் பேணப்பட்டால் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி.ராஜகருணா தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய கிழக்கில் மோதல் நிலை இன்றளவலில் முடிவுக் கொண்டு வரப்படவில்லை. இதனால் உலக சந்தையில் கனிய எண்ணெய் விலையில் ஸ்திரமற்த நிலையே காணப்படுகிறது. இன்று எரிபொருள் விலை குறைவடைந்தாலும் மறுநாள் விலையில் மாற்றம் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையே காணப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் ஆகஸ்ட் மாதம் விலைச்சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தும் நிலவும்.
அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் அதே விலையில் பேணப்படும். சுபர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமில்லை.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து அது நிலையான தன்மையில் பேணப்பட்டால் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.




