நாம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தோமே தவிர, கொள்கைகள் சார்ந்து பேசவில்லை. அதே அடிப்படையில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கொள்கை சார்ந்து எதனையும் பேசவில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் உள்ள மனிதப்புதைகுழி தோண்டப்பட்டுவரும் நிலையில், அதனை அண்மித்த பகுதிகளிலும் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான சாத்தியப்பாடு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. நானறிந்தவரை வடக்கில் குறைந்தபட்சம் 13 இடங்களிலாவது மனிதப்புதைகுழிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மன்னாரில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி பற்றிய உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் இந்த மனிதப்புதைகுழிகள் தோண்டப்படுவது இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, அவைபற்றி உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும்.
அதன்படி தற்போது செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி தோண்டப்பட்டுவரும் நிலையில், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு போதியளவு நிதி வசதியோ அல்லது ஏனைய வசதிகளோ இல்லை எனக் காரணம் கூறாமல், அதற்குரிய சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து, முழுமையான ஒத்துழைப்பைத் தற்போதைய அரசாங்கம் வழங்கவேண்டும். விசேடமாக இவ்விடயம் வெளிப்படைத்தன்மையுடன் கையாளப்படும் அதேவேளை, வெகுவிரைவில் உண்மை கண்டறியப்படவேண்டும்.
அடுத்ததாக நேற்று முன்தினம் (5) பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இச்சட்டமூலம் மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. எனவே இவ்விடயத்தை அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடிக்காமல், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வார கால அவகாசத்தின் பின்னர் அதனை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னர் எமது கட்சியின் அரசியல் குழு கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி வவுனியாவில் கூடியது. அதன்போது வட, கிழக்கில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஒவ்வொரு சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், இது தமிழ்த்தேசிய கட்சிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும் ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன் அதனை நாம் பகிரங்கமாகவும் அறிவித்திருந்தோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது நாம் யாருடனும் கூட்டணி அமைப்பதாகக் கூறிவில்லை. மாறாக நாம் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏனைய கட்சிகளிடம் கோருகிறோம். திருகோணமலை உள்ளிட்ட சில இடங்களில் மாத்திரம் நாம் கூட்டணி அமைத்திருப்பதுடன், அது வெளிப்படையாகவே செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோன்று இதற்கு முன்னர் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேசியபோதும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற சபைகளிலே ஆட்சியமைப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தோமே தவிர, கொள்கைகள் சார்ந்து நாங்கள் பேசவில்லை. அதே அடிப்படையில் தான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அத்தோடு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவரை சிறீதர் தியேட்டருக்கு சென்று சந்தித்தது பற்றியும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் நாமாக சந்திப்பைக் கோரும் பட்சத்தில், நாம் தான் அவர்களது இடத்துக்குச் சென்று பேசவேண்டும் என்பது பதில் தலைவரின் நிலைப்பாடு. இதனையே அவர் கடந்த காலங்களிலும் பின்பற்றியிருக்கிறார். ஆகையினாலேயே அவர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது கட்சித் தலைமையகமான சிறீதர் தியேட்டருக்குச் சென்று சந்தித்தார் என்றார். .