அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடுவதைத் தவிர்த்து, உயர் நீதிமன்றங்களில் வெற்றிடமாக உள்ள நீதிபதி பதவிகளை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா வலியுறுத்தினார்.
கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவானது, நீதித்துறையின் திறனை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசாங்கத்தின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கொண்டுவரப்படுகிறது.
கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிச்சேவை அதிகாரிகள் சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் என்பன இத்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையிலும், அரசாங்கம் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் இதனை நிறைவேற்றத் துடிப்பது பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது.
அரசாங்கமும் ஜனாதிபதியும் உண்மையிலேயே நீதித்துறையின் சுயாதீனத்தையும் வழக்கு விசாரணைகளின் வேகத்தையும் உறுதிப்படுத்த விரும்பினால், தற்போது உயர் நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள 4 பதவிகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள 4 பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். வரலாற்று ரீதியாக இவ்வளவு அதிகமான உயர் நீதிமன்ற வெற்றிட பணியிடங்கள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டதில்லை.
ஓய்வுபெறும் வயதை இரு வருடங்களால் உயர்த்துவது, ஓய்வுபெறும் நிலையிலுள்ள குறிப்பிட்ட ஒரு நீதிபதியைப் பாதுகாப்பதற்காகவே செய்யப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவ்வாறு ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் அத்தியாவசியம் எனக் கருதுவது, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் உள்ள ஏனைய தகைமை வாய்ந்த, அனுபவமிக்க நீதிபதிகளின் திறனைக் கேள்விக்குள்ளாக்கும் செயலாகும்.
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கான சட்டத் திருத்தங்கள், வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கான சிபாரிசுகள் மற்றும் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் அனைத்தும் வரைவு செய்யப்பட்டுத் தயார் நிலையில் உள்ள போதிலும், அவற்றை ஓரமாகத் தள்ளிவிட்டு இந்த ஒரு குறிப்பிட்ட திருத்தத்தை மட்டும் அவசர அவசரமாகக் கொண்டுவருவது நியாயமற்றது.
கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளின்போது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீதித்துறையில், அரசாங்கம் நியாயமற்ற முறையில் தலையிடுவதால், இதுவரைக் காலம் தமது கௌரவத்தைப் பாதுகாத்துச் சேவை செய்த நீதிபதிகள் தமது பெயரைக் கெடுத்துக்கொண்டு ஓய்வுபெற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த அவசர அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிட்டு, வெற்றிடமாகவுள்ள 8 நீதிபதி பதவிகளையும் உடனடியாக நிரப்பி, அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை நிரூபிக்க வேண்டும் என்றார்.





