உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளி எனக் கூறப்படும் இப்ராஹிம் நானா, உங்கள் தேசியப் பட்டியலிலேயே உள்ளார். உண்மையான கொலையாளிகள் எங்களுடன் இருக்கிறார்களா அல்லது உங்களோடு இருக்கிறார்களா என்பதை அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தமது கட்சி வரலாற்றை விஜித ஹேரத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும் என பிவிதுறு எல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் புதன்கிழமை (10) மூன்றாவது நாளாகவும் தீவிரமடைந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர மற்றும் உதய கம்மன் பில ஆகியோரின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில், சர்வஜன அதிகாரம் கட்சியின் திலித் ஜெயவீர, பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஞானசார தேரர், சீலரத்ன தேரர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர். அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்
நேற்று (09) புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்து எமக்கு முக்கிய தகவல் கிடைத்தது. வறிய நிலையில் உள்ள சில தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் கூலிக்கு வேலை செய்யும் குழுவினரை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் இந்தப் போராட்ட இடத்துக்கு அழைத்து வந்து, குழப்பங்களை விளைவித்து சத்தியாக்கிரகத்தைக் கலைக்க அநுர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது சமூக வலைத்தளங்களிலும் பிரசாரம் செய்யப்படுகிறது. எமது போராட்டத்தை குழப்ப முற்படும் இவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெயரில் நடிக்கச் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு பச்சைப் பொய் நாடகமாகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், அவர்கள் இத்தகைய போராட்டங்களுக்கு வரத் தேவையில்லை; மாறாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் செல்ல வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவிய ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் தற்போது பொலிஸ் சேவையிலேயே உள்ளனர்.
அதேபோல், அநுர அரசாங்கத்தின் அரசியல்வாதியான இப்ராஹிம் நானா, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் எப்.பி.ஐ அறிக்கையானது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குச் செலவிடப்பட்ட ஒவ்வொரு சதமும் இப்ராஹிம் நானாவினால் வழங்கப்பட்டது என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, இப்ராஹிம் நானா சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கும் போது, பாதிக்கப்பட்டவர்கள் என்று நடித்துக்கொண்டு இங்கு வருபவர்களை, நாங்கள் இப்ராஹிம் நானாவின் தெமட்டகொட மஹாவில கார்டன்ஸ் இல்லத்துக்கும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்குமே செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்
நேற்று (09) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. நான் விடுத்த சவாலின்படி, அந்தச் சி.சி.டி.வி காட்சிகளைப் பகிரங்கப்படுத்துமாறு கேட்டபோது, அவர் மழுப்பலான பதில்களைக் கூறினாரே தவிர, அதற்குத் தயாராக இல்லை? அந்தக் காட்சிகள் வெளியானால், சுரேஷ் சலேயை பொலிஸார் எத்தகைய கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினர் என்பது நாட்டுக்குத் தெரியவரும் என்பதாலேயே அவர்கள் அதற்குப் பயப்படுகிறார்கள். சுரேஷ் சலேயின் மனைவி, பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்துக்கு இன்றுவரை எந்தப் பதிலும் இல்லை
அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பாராளுமன்றத்தில்; கொலையாளிகளைப் பாதுகாப்பதற்காக விபரீதமான போதி பூஜைகளை நடத்துவதாக கூறுகிறார். நான் அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், சுரேஷ் சலே குற்றவாளி அல்ல அவர் நாட்டின் மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரி.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளி எனக் கூறப்படும் இப்ராஹிம் நானா, உங்கள் தேசியப் பட்டியலிலேயே உள்ளார். அதுமட்டுமின்றி, உங்கள் அரசாங்கத் தலைவர்கள் பலர் 87-89 காலப்பகுதியில் கொலையாளிகளாக இருந்தவர்கள் என்று அமைச்சர் விஜித ஹேரத்தே கூறியுள்ளார்.
ஜே.வி.பி அநுர அரசாங்கத்தின் தலைவர்கள் பலருக்கு அந்த வரலாறு மறந்திருக்கலாம், ஆனால் விஜித ஹேரத் அமைச்சர் அதனை அடிக்கடி நினைவூட்டுகிறார்.
எனவே, உண்மையான கொலையாளிகள் எங்களுடன் இருக்கிறார்களா அல்லது உங்களோடு இருக்கிறார்களா என்பதை அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தமது கட்சி வரலாற்றை விஜித ஹேரத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். தங்கள் அறிவுத்திறன் குறைவாக இருப்பதால், கட்சி இவ்வாறான தவறான முடிவுகளை எடுப்பதை அவர்கள் அறியவில்லை.
சுரேஷ் சலேயை ஷானி அபேசேகரவின் வதைமுகாமிலிருந்து மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும். அரசாங்கம் அல்லது நீதிமன்றத்திலிருந்து எமக்குச் சாதகமான பதில்கள் கிடைக்கும் வரை, எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் தீர்மானிப்போம்.
இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி நான் கருத்துச் சொல்லப் போவதில்லை. நீங்கள் ரில்வின் சில்வா அநுரகுமார திசாநாயக்கவைப் போல என்னையும் சிக்கலில் தள்ளப்பார்க்க வேண்டாம் என்றார்.





