முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கின் முதலாவது சாட்சியாளரான தேசிய சேவை சங்கத்தின் இலங்கை உர நிறுவனத்தின் அதிகாரி சாட்சியமளித்து பிரதிவாதிக்கு எதிரான முறைப்பாட்டை தனது மின்னஞ்சல் கணக்கில் இருந்து அனுப்பியதை ஏற்றுக்கொண்டதை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் அந்த முறைப்பாட்டின் உள்ளடக்கம் தொடர்பில் தன்னால் பொறுப்பேற்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ருஷாந்த கொடவெல்ல முன்னிலையில் புதன்கிழமை (17) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதி மன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் அசித அன்ரனியின் கண்காணிப்பின் கீழ் முறைப்பாட்டின் முதலாவது சாட்சியாளான, தம்மிக பெரேரா சாட்சியமளித்து, ‘தான் லங்கா உர நிறுவனத்தில் சேவையாற்றி தற்போது ஓய்வுப்பெற்றுள்ள நிலையில்,தான் தேசிய சேவை சங்கத்தின் அதிகாரியாகவும் பணிபுரிந்ததாக குறிப்பிட்டார்.11 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மின்னஞ்சல் கணக்கில் இருந்து அனுப்பப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தன்னை அழைத்து வாக்குமூலமளித்து சத்தியமளித்து மன்றில் குறிப்பிட்டார்.
2015.02.25 ஆம் திகதியன்று தான் பணிகளை நிறைவு செய்து வீடு செல்ல முற்பட்ட போது மாலை 04.15 மணியளவில் சங்கத்தின் தலைவர் கடதாசி ஒன்றில் எழுதிய விடயங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு என்னிடம் குறிப்பிட்டார். அவருக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியாத காரணத்தால் என்னிடம் உதவி பெற்றார்’ என்று மன்றில் குறிப்பிட்டார்
இந்த வழக்கின் 2 ஆவது மற்றும் 21 ஆவது சாட்சியாளர்களை எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முறையற்ற வகையிலான விலைமனுகோரல் ஊடாக அரசுக்கு 8,859,708.00 ரூபா நட்டமேற்படுத்திய குற்றத்துக்காக குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதிவாதி 10 இலட்சம் ரூபா சரீர பிணை ஊடாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





