மதவாச்சி சிகையலங்கார நிலைய உரிமையாளர் மீதான தாக்குதல்: சந்தேகநபர் கைது!

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்த காணொளி ஒன்று தொடர்பாக, மதவாச்சி பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09ஆம் திகதி மதவாச்சி பகுதியில் உள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த ஒருவர், அதன் உரிமையாளரைத் தாக்கும் காட்சிகள் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பரவி வந்தன. இது தொடர்பில் கடந்த 10ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது குறித்து மதவாச்சிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று புதன்கிழமை (17) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இந்தத் தாக்குதல் கப்பம் கோரி நடத்தப்பட்டதாகக் கருதப்பட்ட போதிலும், பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் உண்மை நிலை கண்டறியப்பட்டுள்ளது.

இது கப்பம் கோரி நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல, சந்தேக நபருக்கும் சிகையலங்கார நிலைய உரிமையாளருக்கும் இடையே இருந்த பழைய பகைமை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை (18) மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மதவாச்சிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.