சலேவின் கைது சட்டவிரோதமானது !

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது முற்றிலும் சட்டவிரோதமானது. அவரை கைது செய்தமை மற்றும் இத்தனை காலம் தடுத்து வைத்துள்ளமைக்கான காரணங்களை பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிமன்றத்தில் வந்து விளக்க வேண்டும் என சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் ‘மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கான நீதி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஒரு சிறிய அறையில் மிகவும் கடினமான சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது.

சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு முன்னர் நீதிமன்றம் எவ்வித பிடியாணையும் வழங்கவில்லை என்பதுடன், அவர் ஏதேனும் ஒரு வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட வேண்டும் என எந்தவொரு நீதிமன்றமும் உத்தரவிடவில்லை.

நீதவான் அல்லது நீதிமன்றத்திற்கு எவ்வித முன்னறிவித்தலும் இன்றி, பாதுகாப்பு அமைச்சரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

19 மற்றும் 21 ஆம் அரசியலமைப்பு திருத்தங்களின் பின்னர் ஜனாதிபதி சட்டத்திற்கு உட்பட்டவர் என்பதால், சுரேஷ் சலேவை கைது செய்தமை மற்றும் இத்தனை காலம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கான காரணங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிமன்றத்தில் நேரில் வந்து விளக்க வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு , இங்கிலாந்தின் உளவு அமைப்பு, அவுஸ்திரேலியா மற்றும் மாலைதீவு புலனாய்வுப் பிரிவுகள் எனப் பல சர்வதேச அமைப்புகள் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளன. இந்த எந்தவொரு சர்வதேச புலனாய்வு அறிக்கையிலும் சுரேஷ் சலே குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகவில்லை.

ஆனால், தற்போது அரசாங்கம் அவருக்கு எதிராக முன்வைக்கும் காரணங்கள் முற்றிலும் கற்பனையானவை. கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் அமைவிடத்தை சுரேஷ் சலே வழங்கியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது.

ஏனெனில், தாக்குதல்தாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு இல்லங்களைப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு மிக அருகிலேயே பல மாதங்களாக தங்கியிருந்த குண்டுதாரிகளுக்கு, அந்த இடத்தைக் கண்டறிய மற்றுமொருவரின் உதவி தேவையில்லை என்பது புலனாகிறது.

அதேபோல், சாரா ஜஸ்மின் என்பவரின் மரபணு பரிசோதனை விவகாரத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் முரண்பட்ட தகவல்களை வழங்கி வருகின்றது.

சாரா ஜஸ்மின் இறந்துவிட்டதாக ஒருபுறம் டி.என்.ஏ அறிக்கைகள் கூறும் நிலையில், மறுபுறம் அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறி அவருக்கு உதவியதாகக் கருதப்படும் ஒருவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் அதே குற்றப்புலனாய்வு திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

மேலும், பாணந்துறை பகுதியைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் ரூமி என்பவரின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலேவைச் சிக்கவைக்க முயற்சி இடம்பெற்றது.

எனினும், குறித்த நபர் உரையாடியது சுரேஷ் சலேவுடன் அல்ல, மாறாக ஒரு இராணுவ அதிகாரியுடன் மட்டுமே என்பது விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

பிள்ளையான் மற்றும் அசாத் மௌலானா ஆகியோரின் முரண்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் தேவைகளுக்காகவும் சில வெளிநாட்டு ஊடகங்களின் காணொளிகளை மையப்படுத்தியும் ஒரு நேர்மையான இராணுவ அதிகாரியைச் சிறைப்படுத்துவது நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குச் செய்யும் துரோகமாகும்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அறிக்கையின்படி, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற ஏனைய 37 தற்கொலைதாரிகள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர்.

அவர்களைக் கண்டறியாமல், சுரேஷ் சலே போன்ற புலனாய்வு அதிகாரிகளை இலக்கு வைப்பது ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யும் அநீதியாகும்.

எனவே, ஏப்ரல் 22 ஆம் திகதி நீதிமன்றில் சுரேஷ் சலே முன்னிலைப்படுத்தப்படும் போது, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த காலங்களில் இடம்பெற்ற அனைத்து விசாரணைகளின் முடிவுகளையும் நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு முறையான ஆதாரமும் இன்றி சுரேஷ் சலேவைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்றார்.