தமிழக அமைச்சர் ஷாஜஹானுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் வாழ்த்து

தமிழக அரசில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுபான்மை நலத்துறை  அமைச்சை சிறப்பாகக் கையாள்வீர்கள் என்று நம்பிக்கை நிறையவே உண் டென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஏ.எம்.ஷாஜஹானுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஆடுதுறை ஷாஜஹான் அமைச்சராக நியமனம் பெற்றவுடன் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம் அவருக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்திய அரசியலில் மிக நீண்ட கால  வரலாற்றைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஊடாக  முதல் முதலாக பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவுடன் நீங்கள் பொறுப்பு  வாய்ந்த அமைச்சராகவும், தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்  விஜய், தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு இலங்கையில் நேசக்  கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உங்களை வாழ்த்தி வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

அத்துடன் தமிழக அரசின்  ‘தகைசால் தமிழர் “விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கான பாராட்டு விழா மற்றும் இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனிபா நூற்றாண்டு  நிகழ்வு ஆகியவற்றை நாங்கள் கொழும்பில் சென்ற வருடம் விமரிசையாகக் கொண்டாடிய போது நீங்களும் அதில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தீர்கள்.

தமிழகத்துக்கு நான் வருகின்ற போதெல்லாம்  கூடவே இருந்து, என்னோடு பயணித்து, உறுதுணையாக இருந்துவரும் உங்களுடன் நான் ஒரு நெருங்கிய நண்பராகவே பழகி வருகிறேன் .

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு வாய்ந்த  பதவியோடு இணைந்ததாக வக்பு வாரியம் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியனவும் உள்வாங்கப்படுவதாகவும் அறிகிறேன்.

அமைச்சுப் பொறுப்புகளை திறமையாக வகித்து,சிறுபான்மை மக்களின் நலனில் கண்ணும், கருத்துமாக இருந்து, தமிழகத்தில் மதவாத சக்திகள் தலை தூக்குவதற்கு இடமளித்து விடாமல் செயலாற்றி, நீங்கள் புதிய அரசுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவன்  அருள் புரிவானாக என குறிப்பிடப்பட்டுள்ளது.