‘பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தைத் தருவோம்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் பேசியதாவது: நாம் ஏதோ சினிமா ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதல்வரான மாதிரியே சிலபேர் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். 2024-ல் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தோம்.
2026 தேர்தலில் கூட்டணியின்றி தனியாக 35 சதவீத வாக்குகளுடன் வெற்றிபெற்று, தமிழக மக்களாலும், ஆதரவு இயக்கங்களாலும் ஆளுங்கட்சியாக வந்துள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்து 40 நாட்கள்தான் ஆகிறது.
இதில் சிங்கப்பெண் சிறப்பு படை, 200 யூனிட் வரை இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வரும் நாட்களில் படிப்படியாக ஊழல் இல்லாத, பெண்களுக்கு பாதுகாப்பான, வெளிப்படையான தமிழகத்தை மக்களுக்கு தருவோம். திமுக தயவில்தான் ஆட்சி நடைபெறுகிறது; நாங்கள்தான் கூட்டணி கட்சிகளை அனுப்பி வைத்தோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால், அந்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் ஏன் கதறுறீங்க? இதில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் நமக்கு ஆதரவு கொடுத்தது சுயமாக எடுத்த முடிவு என்று சொல்லிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது (ஃபினிஷ்) என்பதை சைகை மொழியில் முன்பு கூறியது அப்போது வைரலானது. அதேபோன்ற சைகையை தனது பேச்சை முடித்தவுடன் முதல்வர் விஜய் செய்தார். இதை தவெக உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

விஜய் சொன்ன குட்டிக் கதை
முதல்வர் விஜய் பேசும்போது, ‘‘ஒரு ஊர்ல ஒரு பெரியவரு, வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லிட்டு கண்ணுக்கு மேல கை வெச்சுக்கிட்டு இப்படி சுத்திமுத்தி தேடிக்கிட்டு இருந்தாராம்.
அப்ப கூட இருந்த ஒரு சின்னபையன் என்ன தேடுறீங்க அப்படின்னு கேட்டானாம். அதுக்கு அந்த பெரியவர் சொன்னாராம், ‘அது ஒண்ணுமில்ல தம்பி, உங்க அப்பா இங்கதான் இருப்பாருன்னு சொன்னாங்க, அதான் தேடிக்கிட்டு இருக்கேன்.
எங்க உங்க அப்பாவையே காணோம்?னு அந்த பெரியவர் சொன்னாராம். இது கதைதான், அதனால யாரும் இங்க டென்ஷனாக வேண்டாம்’’ என்று திமுகவை மறைமுகமாக கிண்டல் செய்தார்.





