தையிட்டி காணிகளை விடுவிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாகத் தெரியவில்லை!

தையிட்டி விகாரை பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக்கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் புதன்கிழமை (15) நடைபெற்ற ‘தையிட்டி : அடுத்து என்ன?’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தையிட்டி விகாரையின் பெயர்ப்பலகையில் சிறீலங்கா இராணுவத்தினரால் கட்டப்பட்டு அவர்களால் பராமரிக்கப்படுகின்ற விகாரை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகாரை பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமானதா என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது.

விகாரை அமைந்திருக்கும் காணி உரிமையாளர்கள் அந்த விகாரையின் வாசலுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

தென்பகுதியில் குழப்பங்கள் ஏற்படும் எனக் கூறிக்கொண்டு தையிட்டி விகாரைக்கு பலத்த பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் அந்த விகாரையில் இருக்கக்கூடிய ஒரு துண்டு நிலத்தைக் கூட விடுவிக்க முடியாது என்பதே ஆகும்.

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது.

அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தையிட்டி விகாரைப் பிரச்சினை தொடர்பாகவும் எங்களோடு கலந்துரையாடியிருந்தார். அந்த விகாரைப் பிரச்சினை தொடர்பாக தாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறார்கள் எனவும் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

தையிட்டி விவகாரம் தொடர்பில் உலக நாடுகளால் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டிப் பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது.

வேறு இடங்களில் காணிகளை சுவீகரிக்கின்ற போது எழுத்து மூலமான அறிவிப்பின் மூலமே காணிகளை சுவீகரிக்கிறார்கள். ஆனால் தையிட்டி விகாரைப் பிரச்சினையில் நடப்பதோ வேறு விதமாக உள்ளது.

நில அளவைகள் திணைக்களம் எந்தக் கட்டளையின் அடிப்படையில் இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கு தயாராகின்றது? எழுத்து மூலமாகக் கட்டளைகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கின்றதா? அவ்வாறாயின் என்ன தேவைக்காக குறித்த காணிகள் அளவிடப்படுகின்றன என அந்த எழுத்து மூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

மக்களுக்கு காணிகளை விடுவிப்பதற்காகவே இந்த அரசாங்கம் காணிகளை அளவீடு செய்கின்றது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

குருந்தூர் மலையிலும் அகழ்வுப் பணிகளை மாத்திரமே செய்வோம், எதுவித கட்டுமானப் பணிகளும் இடம்பெறாது என அப்போதைய புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். ஆனால் தற்போது ஒரு விகாரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இப்படி தையிட்டி பகுதியிலும் பிரச்சினை கைமீறிப்போன பின்னர் எதிர்ப்புக் காட்டி எதுவித பலனும் இல்லை.

தையிட்டிப் பகுதியில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று வருடங்களாக இடம்பெறும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகவே அந்த ஆக்கிரமிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. இல்லையெனில் அந்த இடம் முழுவதுமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

தையிட்டி காணி உரிமையாளர்கள் மாற்றுக் காணிகளை பெற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் அபத்தமான பொய் ஒன்றை அண்மையில் கூறியிருந்தார்.

தொடர்ந்தும் தையிட்டி விகாரை பகுதியைச் சூழ உள்ள காணிகளுக்குப் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் அவதானிக்கின்றபோது காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்ற உத்தரவாதம் இல்லை என்றே கூறவேண்டும்.

அரசாங்கம் காணிகளை அளவீடு செய்து மக்களுக்கு வழங்கும் என்பதனை எழுத்து மூலமாக அறிவிக்குமானால் காணிகளை அளவீடு செய்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் சிந்திக்கலாம். ஆனால் அப்படி ஓர் எழுத்துமூல உத்தரவாதத்தை தராத நிலையில் அளவீட்டுப் பணிகளை அனுமதிக்கமுடியாது என்றார்.