ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டு நாட்டில் பலமான எதிர்க்கட்சி வகிபாகத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது எனவும், அவர் மக்கள் முன்னிலையில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக மாறியுள்ளதாகவும் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்
ஜனநாயக தேசிய முன்னணி கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
இன்று எமது நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் பாரிய சிக்கல் நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளினதும் அதன் செயற்பாட்டாளர்களினதும் பொறுப்பற்ற பேச்சுகள் மற்றும் செயற்பாடுகளினால் நாடு இன்று பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. சுமார் 70 வருடங்களாக பிரதான இரண்டு கட்சிகள் மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தன.
அதில் ஒரு பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்று சிறிகொத்த கட்டிடத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவராக கடந்த 30 வருடங்களாக செயற்படுபவர் அந்த கட்சியை முழுமையாக அழித்து புதைத்துவிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்று சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி எனும் மாற்று அணி உருவாக்கப்பட்டது. ஆனால் அவரால் நாட்டை பொறுப்பேற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. சுமார் 55 முதல் 70 தடவைகள் வரை தனக்கு பிரதமர் பதவி வழங்க அழைப்பு விடுக்கப்பட்டதாக அவரே கூறுகின்றார். ஆனால் அதனை பொறுப்பேற்க தைரியம் இல்லாமல் அவர் ஓடிவிட்டார்.
நாட்டின் நெருக்கடி நிலைமையின்போது பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்த வேளையில் அவர் ஏன் போட்டியிடவில்லை? பொறுப்புகளை ஏற்க அவருக்குத் துணிச்சல் இல்லை. அவர் இன்று மக்கள் முன்னிலையில் ஒரு விகடகவியாக மாறியுள்ளார். சஜித் பிரேமதாசவின் மீது அவரது அணியினருக்கே நம்பிக்கை இல்லை. இவரை வைத்துக்கொண்டு எவ்வாறு எதிர்க்கட்சியின் அரசியலை முன்னெடுக்க முடியும்?
மறுபுறம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இன்று டார்லி வீதி கட்டிடத்திற்குள் முடங்கியுள்ளது. அந்த கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் யார் என்பதை தீர்மானிக்க நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச தரப்பினர் நாட்டை வங்குரோத்தாக்கி மக்களை வீதிக்கு கொண்டு வந்தனர். ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் வேட்டையாடிய ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த போன்றவர்களுடனா மீண்டும் எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவது?
ஒரு நாட்டின் ஆரோக்கியமான ஆட்சிக்கு பலமான எதிர்க்கட்சி அவசியம். ஹங்கேரி மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் தகுதியான எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஜனாதிபதியை உருவாக்கும் அளவுக்கு தகுதியான ஒரு தலைவர் இன்று எமது நாட்டு எதிர்க்கட்சியில் இல்லை. இவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதை விடுத்து தமது வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கும் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கும் மாத்திரமே முயற்சிக்கின்றனர்.
இந்த சித்திரை புத்தாண்டு காலத்திலாவது நாட்டுக்காக ஒரு பலமான எதிர்க்கட்சியும் அதனை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரும் உருவாக வேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம். தற்போதைய நிலையில் ஓரளவு நம்பிக்கை தரும் விதமாக செயற்படும் திலித் ஜயவீரவுக்கு நாம் ஒரு அழைப்பை விடுக்கின்றோம். சிதைந்து போயுள்ள இந்த எதிர்க்கட்சி முகாம்களில் இருந்து வெளியேறி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பியுங்கள். இல்லையேல் உங்களது அரசியல் பயணமும் இவர்களுடன் சேர்ந்து அழிந்துவிடும்.
தற்போதைய மின்சக்தி நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் துயரங்களை அரசாங்கத்திற்கு கொண்டு செல்ல எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது அவரது அணியோ முன்வருவதில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஒரு பலமான எதிர்க்கட்சித் தலைமை உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.




