பிளாஸ்டிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, வேறு பைகள் சந்தைக்கு வராமல் எப்படிப் பிளாஸ்டிக் பைகளைக் கைவிடுவது என்றே பலரும் கேட்கிறார்கள். பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளைக் கைவிடவேண்டும் என்று உளமாற நினைத்து, உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று தானாக வரும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை (5) யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தின் இந்த ஆண்டின் கருப்பொருள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை இல்லாதொழிப்போம்” என்பதேயாகும். அதற்கு அமைய, கல்லூரி அதிபர் சுமதி கந்தசாமியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐங்கரநேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மனிதன் சுற்றுச்சூழலில் குவிக்கும் கழிவுகளில் இயற்கைக்கும் மனித உடல்நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகள்தான் முதலிடத்தில் உள்ளன.
மண்ணோடு மண்ணாக மக்கிப்போகாத இவை சூழலில் பன்னெடுங்காலம் நீடித்து இருக்கக்கூடியவை. நுண்துகள்களாக உணவுடனும் நீருடனும் சிறுகச்சிறுக எமது உடலினுள் நுழைந்து தேங்கி வருகிறது. இவற்றை எரிக்கும்போது டையொக்சின் என்னும் நச்சுவாயு வெளியேறுகிறது. இந்த நஞ்சு மனிதர்களில் புற்றுநோய்களையும் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தக்கூடியது.
பிளாஸ்டிக்கை முற்றாகத் தவிர்க்க முடியாமற்போனாலும் பிளாஸ்டிக் பைகளையும், ஒரு நாள் பாவித்துவிட்டு வீசுகின்ற பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட குவளைகள், தட்டுகள், உணவைப் பொதி செய்யும் பெட்டிகள் போன்றவையும் நாங்கள் முற்றாகவே கைவிடலாம்.
சூழலில் குவியும் திண்மக் கழிவுகளில் இவற்றின் பங்குதான் மிக அதிகமாக உள்ளது. இவற்றுக்கான மாற்றாகக் கடதாசிப் பைகளையும் துணிப்பைகளையும் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வரும் வரை நாங்கள் எல்லோரும் இவற்றைத்தானே பயன்படுத்தினோம்.
கடதாசிப் பைகளையும் துணிப் பைகளையும் பாவிப்பதை இன்றைய தலைமுறை நாகரிகக் குறைவானதாகவும் அவமானமாகவும் கருதுகிறது. இது எங்கள் மனதில் உள்ள பிரச்சினை. உண்மையில் இயற்கைக்கு இசைவான சூழல், நட்பு மிக்க பொருட்களைப் பயன்படுத்துபவர்களே நாகரிகமானவர்கள். நற்பண்புகளைக் கொண்டவர்கள். அந்த வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்றை சந்தையில் தேடாமல் முதலில் எமது மனங்களில் மாற்றங்களைத் தேடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மாணவிகளிடையே சூழல் தொடர்பான வினா விடைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.