மூளைக்காய்ச்சல் சந்தேகத்தில் 63 பேர் அடையாளம் ; 32 பேருக்கு தொற்று உறுதி – சுகாதார அமைச்சு

மூளைக்காய்ச்சல் அல்லது மெனின்ஜைடிஸ் எனும் வைரஸ் நோய் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 63 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 32 பேருக்கு இந்நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபெம தெரிவித்தார்.

நோய் பரவல் தொடர்பில் திங்கட்கிழமை (25) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தெனியாய பகுதியில் சிறுவர்கள் மத்தியில் மூளைக்காய்ச்சல் அல்லது மெனின்ஜைடிஸ் எனும் வைரஸ் தொற்று பரவி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

நோத்தொற்றுக்கு ஆளானவரிடம், நீடித்த காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படக்கூடும். கடந்த சில வாரங்களாக தெனியாய கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளான பலர் அடையளம் காணப்பட்டு வருகின்றனர்.

தற்போது வரை இந்நோய் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 63 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 32 பேருக்கு மாத்திரமே இந்நோய் உள்ளமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்ப் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்தே இந்நோய் தொடர்பான கண்காணிப்பு செயல்முறைகளை பலப்படுத்தி, சந்தேகத்துக்குறிய நோயாளர்கள் எவரேனும் இருப்பார்களாயின் அவர்களைக் கண்டறிவதற்கும், தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் நோயை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

விசேட வைத்திய நிபுணர்கள் ஊடாக வைத்தியசாலைகளில் இதற்கு அவசியமான சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நோய்க்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுவாக ஐந்து நாட்களுக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நான்கு அல்லது ஐந்து பேர் மாத்திரமே சிகிச்சை பெற்றனர், அந்நோயாளர்களிலும் சிலர் தற்போது சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வைரஸ் முக்கியமாக அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலமும், உமிழ்நீர்த் வழியாகவும் மிக நெருங்கிப் பழகுபவர்கள் மத்தியிலும் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

எனவே, இது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்தும் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் ஏனைய தேவையான குழுக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, பாடசாலைகளில் நீர் விநியோகம் மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கல்வி அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், இப்பகுதிகளில் நீர் வழங்கல்வடிகாலமைப்பு சபைக்கு மேலதிகமாகப் பல சமூக நீர் விநியோகக் கட்டமைப்புகளும் காணப்படுகின்றன.

ஆகையால் அந்த சமூக நீர் விநியோகக் கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.