“குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” – தவெக மீது ஸ்டாலின் தாக்கு

“தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதன்மூலம், ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்ட நிலையில், மு.க.ஸ்டாலின் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

காட்சி 3: அதிமுக உறுப்பினர்கள் சிலரை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?

‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள்.

என்டிஏ ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!” என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“சகிக்கவே முடியாத துர்நாற்றம்” –

குதிரை பேர குற்றச்சாட்டுக்கு தவெக ஆளாவது இது முதன்முறை அல்ல. முன்னதாக, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததை சுட்டிக்காட்டிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அப்போது பகிர்ந்த ட்வீட்டில், “தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல, யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

தொடர்ந்து இன்று அவர் பதிவு செய்த ட்வீட்டில், “ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அதிமுக தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்?

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேமுதிக பொதுச்செயலாளர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் விருத்கிரிஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “குதிரை பேரம் இல்லை என்றால் முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்? அதிமுகவின் ஓர் அணியை அவரே சந்திக்கிறார். குதிரை பேரம் இல்லை என முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிபந்தனையற்ற ஆதரவு போல அதிமுக அணியும் அறிவிக்க வேண்டும். திமுக கூட்டணி நிபந்தனையற்ற ஆதரவு போல, அதிமுக அணியும் அறிவிக்க வேண்டும்.” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.