யாழ். மற்றும் வவுனியா சிறைகளில் வைத்தியர்கள் நியமனம்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் வைத்தியர்கள் இருவர் கடமையாற்றுகின்றனர்.எதிர்காலத்தில் சிறைச்சாலை வைத்தியசாலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09)  நடைபெற்ற அமர்வில்  பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் முன்வத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  உரையாற்றியதாவது,

வடக்கு மாகாணத்தின் வவுனியா சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவர் இருக்கின்றார். வைத்தியர் வை.ரூபசிங்கம் என்பவர் அங்கு கடமையாற்றுகின்றார். யாழ். சிறைச்சாலையிலும் வைத்தியர் இருக்கின்றார். கோபிகிருஷ்னண் என்பவர் வைத்தியராக கடமையாற்றுகின்றார்.

அந்த சிறைச்சாலைகளுக்கு அமைச்சர்கள் சென்று பார்த்துள்ளார்களா என்று சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் தகவல் கேட்டுள்ளோம். அந்த தகவல் கிடைத்ததும் கூறுகின்றோம். சிறைச்சாலை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இருவர், மூவர் பணியாற்றுவர். 6 மணித்தியாலங்கள் பணியாற்றுவர். அத்துடன் தொலைபேசி தொடர்பிலும் பணியாற்றுவர்.

சிறைச்சாலைகளில் ஏதேனும் அவசர நிலைமைகளின் போது தேவையான சிகிச்சைகளை வழங்கும் முறைகள் உள்ளன. ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலை வைத்தியசாலைகளில் தேவையான சகல மருந்துகளும் உள்ளன. அந்தந்த சிறைச்சாலைகளுக்கு ஏற்றால் போன்று மருந்துகள் விநியோகிக்கப்படும்.

இதேவேளை வெளியில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் போது நோய்வாய்ப்படும் நிலையில் அதன்போது அவர்களுக்கு பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றது. பெரும்பாலான சிறைக் கைதிகள் இவ்வாறு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றார்.