வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு 7606 நாய்களுக்குக் கருத்தடைச் சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கான நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டு 7606 நாய்களுக்குக் கருத்தடைச் சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதென வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை (01.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது.

யாழ். மாநகர சபை – 120 நாய்கள்,  ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் – 5,216 நாய்கள்,  கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) – 350 நாய்கள், முல்லைத்தீவு மாவட்டம் – 750 நாய்கள், வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) – 1170 நாய்கள்

இச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் இத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய திங்கட்கிழமை (03.08.2026) யாழ்.மாநகர சபையிலும், 04.08.2026 முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், 23.08.2026 வவுனியா மாநகர சபையிலும் இத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இத் திட்டத்தை வினைத் திறனுடன் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பக்கட்டக் கலந்துரையாடல் யாழ்.மாவட்டத்தில் கடந்த 24.07.2026 நிறைவடைந்துள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும்-  03 ஆம் திகதியும்,  மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும்- 07 ஆம் திகதியும் விசேட கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. இக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உரிய பொறிமுறைகளின் ஊடாகக் குறித்த மாவட்டங்களிலும் கருத்தடைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் அனுபவங்களைக் கருத்திற் கொண்டும், விலங்கு நல அமைப்புக்களின் ஆக்கபூர்வமான சுட்டிக்காட்டல்களை உள்வாங்கியும் இம் முறை இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய விலங்கு நலச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத் திட்டத்துக்கு அனைத்துப் பொதுமக்களும், உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.