முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோரின் கைது விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித அரசியல் தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. சட்டமும் பாதுகாப்புதுறையும் தங்களது கடமைகளை சுதந்திரமாக செய்து வருகின்றன. எதிர்க்கட்சியினர் எவரேனும் இதில் தொடர்புபட்டிருந்தால், அவர்கள் நீதிமன்றத்தின் முன் தோன்றி தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டவர்களின் கைது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தில் அரசாங்கமாகிய எமது பிரதான பணி அரசியல் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதாகும். எனவே, இந்த விவகாரங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களமும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சும், பொலிஸ் மா அதிபரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசாங்கம் தலையிடுவதில்லை; மாறாக, அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான வழிகாட்டல்களையும், அதற்குத் தேவையான சேவைகளையும் வசதிகளையும் மட்டுமே செய்து கொடுக்கிறது.
எனவே, பொது எதிர்க்கட்சியில் யாராவது இந்த விவகாரங்களுடன் தொடர்புபட்டிருந்தால், அவர்கள் நீதிமன்றத்திற்கு முன்னால் வந்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதுதான் அவர்களின் பொறுப்பாகும். அரசாங்கமாகிய நாம் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்திலும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஒரு அரசாங்கமாக எங்களின் கடமை, மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நலனையும் உறுதி செய்வதாகும். பொது மக்கள் இந்த அரசாங்கத்தை எங்களிடம் ஒப்படைத்திருப்பது அவர்களுக்காகப் பணியாற்றுவதற்காகத்தான்; ஏனெனில் இதுவொரு மக்கள் அரசாங்கமாகும். மேலும், பொது எதிர்க்கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது இப்போது அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்த ஒன்றேயாகும் என்றார்.





