வெளியக காரணிகளால்தான் டொலரின் பெறுமதி உயர்கிறது!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கும். 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி மீண்டும் தோற்றம் பெறாது. வெளியக காரணிகளால்தான் டொலரின் பெறுமதி உயர்வடைகிறது. இதனால் பொருளாதாரத்துக்கு  பாதிப்பு ஏற்படாது என தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான  அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நடைபெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக்கொள்வதில் இந்த 27ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பணிப்பாளர் சபை இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும்.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இந்த வருடத்துக்குள் 480 மில்லியன் டொலர்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களும், அதன் இணை நிறுவனம் ஒன்றிடமிருந்து 50 மில்லியன் டொலர்களும் கிடைக்கவுள்ளன. எனவே, தற்போதைய நிலைமையை  முகாமைத்துவம் செய்வதில் எந்தவொரு சிக்கலும் ஏற்படாது.

அரசாங்கத்தின் உள்ளக தீர்மானங்களினால் டொலரின் பெறுமதி உயர்வடையவில்லை. வெளியக தாக்கங்களினால் தான் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இதனால்  பொருளாதார கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

டொலரின் பெறுமதி உயர்வடைகிறது. கோட்டாபய  ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியே இந்த அரசாங்கத்துக்கு ஏற்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். தவறான பொருளாதார கொள்கையினால் தான் 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அவ்வாறான நிலை எமது அரசாங்கத்தில் ஏற்படாது.

மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால்தான் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதற்காக கோட்டா முறைமையை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இருந்து டொலர் வெளியேற்றலை தடுப்பதற்காக வாகன இறக்குமதிக்கு தற்காலிகமாக  50 சதவீத மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தவிர்த்து ஏனைய தனிப்பட்ட வாகனங்களுக்கான தீர்வை வரியும் தற்காலிகமாக திருத்தப்பட்டுள்ளது.  வாகன இறக்குமதி தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படும் என்றார்.