மேலூர் அருகே கள்ளந்திரி கிராமத்திலுள்ள ஐந்து கோவில் முத்தன் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பெரிய நாகினி கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாய அறுவடைப் பணிகள் முடிந்தவுடன் ஆண்டுதோறும் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான மீன்பிடித்திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் கள்ளந்திரி,அழகர்கோவில் வலையபட்டி,மாங்குளம், மீனாட்சிபுரம், மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகாலையிலிருந்து கண்மாய் கரையில் காத்திருந்தனர். கிராம பிரமுகர்கள் கோயிலில் வழிபாடு செய்த பிறகு மீன்களை பிடிக்க அனுமதி அளித்தனர். அதன் பின்னர் ஆயிரக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த வலைகள், ஊத்தா ஆகியவற்றுடன் கட்லா, ரோகு, திலேபியா, விரால் ஆகிய மீன்களை பிடித்துச் சென்றனர்.





