ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு

முதல்வர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

விஜய்யை தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பிறகு அமைச்சர்கள் அனைவருக்கும் முதல்வர் விஜய் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிகிறது.