மறைந்த கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பொரள்ளையில் தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடலுக்கு, இன்றையதினம்  காலை சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த சந்திரசேனவின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷவிடம், இலஞ்ச மற்றும் ஊழல்  குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை குறித்துக் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், நிச்சயமாக நான் ஆணைக்குழுவில் முன்னிலையாவேன். நாம் அங்கு சென்றுதானே ஆகவேண்டும் என பதிலளித்துள்ளார்.

மறைந்த கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் மாலை 5.00 மணிக்கு பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.