தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டத்தை இயற்ற வைப்போம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் உருவாக்கப்பட்ட “இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் கவுரம் என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு மசோதா தமிழ்நாடு – 2026 மாதிரி சட்டம்”, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சாதிய படுகொலைகள் என்பது தினந்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன.
சாதி, மத மறுப்பு திருமணங்களை செய்தவர்கள் எப்போது, என்ன நடக்கும் என்று தெரியாமலே ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சாதிய படுகொலையை தடுக்க தமிழக அரசு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரைகளை வழங்கியிருந்தும், அவை எதுவும் தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இதற்காக, கடந்த ஆட்சியில் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.





