அவுஸ்திரேலியாவில் ரயிலில் நபரை கொடூரமாகத் தாக்கிய இலங்கை இளைஞருக்கு 8 மாத சிறை !

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவரை கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான இளைஞனுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, குறித்த இளைஞன் மற்றும் அவரது நண்பருடன் இணைந்து, ரயிலில் தனியாகப் பயணம் செய்த நபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் அவரை தாக்கியுள்ளனர்.

இதன்போது, இருவரும் இணைந்து அந்த நபரின் முகம் மற்றும் தலையில் பலமுறை தாக்கியதுடன், அவர் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது, மூடப்பட்டிருந்த கதவுகளின் வழியாக அவரை இழுத்துத் தடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்டவரின் பையைப் பறிக்க முயன்றபோது, 22 வயதான இளைஞன் கண்ணாடிப் பொருளொன்றால் அவரது தலையில் பலமாகத் தாக்கியதாகவும், இதனால் அவர் பலத்த காயமடைந்து இரத்தம் சிந்திய நிலையில் சிகிச்சை பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னர், பாதிக்கப்பட்ட நபர் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்பட்டது.

கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 22 வயதான இளைஞன் தற்காப்புக்காகவே தாக்கியதாக வாதிட்டார். எனினும், அந்த வாதத்தை நிராகரித்த நீதவான்  “தற்காப்பு என்பது வேறு; ஒருவரின் தலையில் தாக்குவது தற்காப்பாகாது. இது அப்பாவி ஒருவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்” என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.

இந்தக் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை 12 மாதங்கள் என்பதால், குறித்த இளைஞருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் கழித்திருந்த காரணத்தால், மீதமுள்ள தண்டனைக் காலத்தை கண்காணிப்பு நிபந்தனைகளுடன் பிணையில் கழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த குறித்த இளைஞனுக்கு கடந்த ஆண்டு அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. மெல்போர்னிலிருந்து வேலை தேடி பிரிஸ்பேனுக்கு சென்ற அவர், சம்பவம் நடந்த காலத்தில் வேலையற்றவராகவும் நிரந்தர இருப்பிடம் இல்லாதவராகவும் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதே தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அவரது நண்பருக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.