அரசியலமைப்பு பேரவை ஆணைக்குழு நியமன விண்ணப்ப நடைமுறை கவலைக்கிடம் – மார்ச் 12 அமைப்பு

அரசியலமைப்பு பேரவை ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் பின்பற்றிவரும் விண்ணப்ப நடைமுறை கவலையளிக்கிறது என மார்ச் 12 அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் மார்ச் 12 அமைப்பின் அமைப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி அரசியலமைப்பு பேரவையின் தலைவரும் சபாநாயகருமான ஜகத் விக்ரமரத்னவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பு பேரவை மற்றும் அதனால் நியமிக்கப்படும் ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளடங்கிய செயன்முறை தொடர்பிலும் நாம் ஆரம்பத்திலிருந்தே ஆர்வத்துடன் தலையிட்டு வருகிறோம். தற்சமயம், பல ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மேலும் சில ஆணைக்குழுக்களுக்கு மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு உங்களது அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

எனவே, இந்த ஒட்டுமொத்த செயன்முறை குறித்து எங்களது பலத்த கவலையை தெரிவிப்பதுமே இக்கடிதத்தை உங்களுக்கு அனுப்பும் நோக்கமாகும். ஒரு குடிமக்கள் குழுவாக எங்களது ஒரே எதிர்பார்ப்பு என்னவெனில், உங்களது ஆணைக்குழுவின் நீண்டகால கொள்கைகள் மற்றும் உடனடி தலையீடுகள் மூலம் நாட்டின் நல்லாட்சி சரியான திசையை நோக்கி நகர்வதைக் காண்பதாகும். எனவே, இவ்வாறானதொரு செயன்முறையில் முடிந்தவரை வெளிப்படைத்தன்மையான மற்றும் பொறுப்புக்கூறல்மிக்க அணுகுமுறையைப் பின்பற்றுவது, நல்ஆட்சியை எதிர்பார்க்கும் எவராலும் இலகுவில் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்.

அரசியலமைப்பு பேரவையின் ஆரம்ப காலத்தில் விண்ணப்பங்களை கோரும் முறையானது, குறிப்பிட்ட உறுப்பினர் பதவிக்கான சுய விண்ணப்பமாக அமைந்திருக்கவில்லை. தகுதியான ஒரு உறுப்பினரை, அவரது விருப்பத்திற்கு ஏற்ப, அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு அமைப்பு அல்லது நிறுவனத்தால் பரிந்துரைத்து அனுப்புவதே நடைமுறையாக இருந்தது. ஆனால் இன்று, சம்பந்தப்பட்ட நபரே விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவ்வளவு பயனுள்ள அணுகுமுறை அல்ல என்பது எமது நம்பிக்கையாகும். இதற்கான தீர்மானங்களை எடுக்கும்போது எவ்விதமான அளவுகோல்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டன என்பது குறித்து நாங்கள் வியப்படைகிறோம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மேலும், சுய விண்ணப்ப முறையின் கீழ் அடிப்படைத் தகுதி மட்டுமே கொண்ட எவரும் விண்ணப்பிக்கத் தூண்டப்படலாம். ஆனால் உண்மையில், ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்குத் தேவைப்படுவது அடிப்படைத் தகுதிக்கு மேலதிகமாக, சமூகத்திற்கு ஏதேனும் அறிவுசார் பங்களிப்பை வழங்கிய திறமையான ஒரு குடிமகனாவார். ஒரு வெளிப்பக்கத் தரப்பினர் தனது பிரதிநிதியாக ஒருவரை பரிந்துரைக்கும் சந்தர்ப்பத்தில் கருத்தில் கொள்ளும் முதல் அளவுகோல், அவரால் ஆற்றி முடிக்கப்பட்டுள்ள சமூக சேவை அல்லது தெளிவாகத் தெரியும் தொழில்முறை அனுபவமாகும்.

அவ்வாறன்றி, அனைவரும் விண்ணப்பிக்கும் போது அச்செயன்முறைக்குரிய உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. எமது கருத்தை உறுதிப்படுத்தும் சிறந்த உதாரணம் என்னவென்றால், இம்முறை முதற்கட்டத்தில் சில ஆணைக்குழுக்களுக்கு மீண்டும் விண்ணப்பங்களை கோர வேண்டிய நிலை ஏற்பட்டமையாகும். இத்தகைய பலவீனமான துலங்கல் கிடைப்பது என்பது, நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்களின் கட்டமைப்பு குறித்து தற்போது நிலவும் ஏதேனும் நல்ல மற்றும் நேர்மறையான உணர்வுகள் இருப்பின், அதை அடக்கிவிடும் ஒரு எதிர்மறையான காரணியாகும் என்பதை குறிப்பிட வேண்டும்.

எங்களது பொதுவான அவதானிப்பு என்னவெனில், குறிப்பிடத்தக்க சமூக சேவையாற்றிய எளிமையான தொழில் வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் பலர் பெரும்பாலும் சுய விண்ணப்ப செயன்முறைக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர் என்பதாகும். எனவே, விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு வெளித்தரப்பினருக்கு வாய்ப்பளிப்பது மிகவும் காலத்திற்குப் பொருத்தமானதாகவும் அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கும் என்பது மார்ச் 12 இயக்கத்தின் நம்பிக்கையாகும்.

அத்துடன் புதிய உறுப்பினர்களால் நிரப்பப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தின் வடிவத்திலும் சில மாற்றங்களைச் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம். தற்போது முன்மொழியப்பட்டுள்ள படிவத்தின் மூலம் மிக முக்கியமான தகவல்கள் கேட்கப்படுகின்றன, அவை அனைத்தும் மிகவும் முக்கியமானவையே.

இருப்பினும், விண்ணப்பதாரர்களில் சிலர் மட்டுமே முதற்கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுவதால், அதற்குப் பொருத்தமான தகவல்களை உள்ளடக்கிய, பயன்படுத்துவதற்கு எளிமையான, சுலபமான  படிவத்தை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்பது எமது கருத்தாகும். மேலும், இப்பதவிகளை வழங்கும்போது விசேடமாகக் கருதப்படும் விடயமான — புகழ்பெற்ற, சிறப்பான சமூக மாற்றத்திற்காக உத்தியோகபூர்வ, தொழில்முறை, நடைமுறை மட்டத்தில் ஏதேனும் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை விண்ணப்பப் படிவத்தின் மூலம் தெளிவாக வினவ வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். உங்களது அரசியலமைப்பு பேரவை மேற்சொன்ன முதலாவது கருத்தை அங்கீகரித்தால், உறுப்பினரைப் பரிந்துரைக்கும் வெளித்தரப்பினர் இயல்பாகவே இத்தகைய சமூக அல்லது நிர்வாக மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நபர்களைப் பரிந்துரைக்க முன்வருவார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இலங்கையில் ஆணைக்குழுக்களை நிறுவுவது என்பது வெறும் நிர்வாக அல்லது அரசியல் மாற்றத்தைப் பதிவு செய்வதல்ல. அது இந்நாட்டு குடிமக்கள் பெற்ற ஒரு எதிர்காலத்திற்கான வெற்றியாகும். ஆனால் இன்று, ஆணைக்குழுக்களின் இயக்கம் குறித்து தீவிரமானதொரு சிக்கல் எழுந்துள்ளது. இத்தகையதொரு சிக்கலின் போது முதன்முதலில் நிமிர்ந்து நிற்க வேண்டியது உங்களது அரசியலமைப்பு பேரவையாகும். எனவே, உங்களது பேரவை இந்த ஒட்டுமொத்த செயன்முறையிலும் மிகவும் ஊக்கமிக்க மற்றும் முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறோம்.