சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துவந்த கரீம் கான், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவுடன் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றில் தலைமை வழக்கறிஞர் ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிரிட்டிஷ் வழக்கறிஞரான கரீம் கான் மீது, அவருடன் பணியாற்றிய பெண் உதவியாளர் ஒருவரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
எனினும், நீதிமன்றத்தின் மேற்பார்வை அமைப்பின் நிர்வாகக் குழு மேற்கொண்ட விசாரணையில், கரீம் கான் “தீவிரமான முறைகேட்டில்” ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்.
விசாரணை ஆவணங்களின்படி, கரீம் கான் அந்த பெண் ஊழியருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன், அவர் அளித்த குற்றச்சாட்டுகளை தொடரவிடாமல் தடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளையும் விசாரணை முடிவுகளையும் கரீம் கான் நிராகரித்துள்ளார்.
மனிதகுலத்திற்கு எதிரான போர் குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற மிகக் கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அண்மைக்காலமாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக விரிவான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அண்மையில் அறிவித்திருந்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நிராகரிக்க உறுப்பு நாடுகளை வலியுறுத்துவதுடன், நீதிமன்றத்துடன் இணைந்து செயல்படும் அமைப்புகள் மீது தடைகள் விதிப்பது மற்றும் அதன் அதிகாரிகளின் அமெரிக்கப் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கரீம் கானின் பதவிநீக்கம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை, நிர்வாகப் பொறுப்புணர்வு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.





