40 வருடங்களாக ஒளிந்துள்ள அந்தப் பயங்கர உண்மை – நெஞ்சைப் பதற வைக்கும் கண்ணீர்களின் சோலை!

போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான சமூக உரிமையுள்ள நினைவகமாகவும், உளவள ஆற்றுப்படுத்தலுக்கான இடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் கண்ணீர்களின் சோலை உருவாக்கப்பட்டுள்ளது.

“கடந்த காலத்தை நினைவில் கொண்டு, எதிர்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இம்முயற்சி, நினைவுகளைப் பாதுகாப்பதையும், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை மதிப்பதையும், குடும்பங்களுக்கு சிந்தனை, நினைவு, ஆறுதல் மற்றும் நம்பிக்கைக்கான ஒரு இடத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மனித உரிமைகளுக்கான இல்லத்தின் நிறுவனர் சேவியரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “கண்ணீர்களின் சோலை” திறந்து வைக்கப்பட்டது.

வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

சில குடும்பங்கள் நாற்பது ஆண்டுகளாகியும், தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் இருப்பிடம் தொடர்பாக எந்த உண்மையையோ பதிலையோ பெறாமல் காத்திருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கண்ணீர்களின் சோலை வளாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நடப்பட்ட மரக்கன்றுகள், உண்மைக்கான தேடல், நீதிக்கான போராட்டம் மற்றும் அங்கீகாரத்திற்கான கோரிக்கையின் உயிர்ப்புள்ள அடையாளங்களாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மரங்கள் நினைவின் சின்னங்களாக மட்டுமன்றி, ஒருநாள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும், அரசிடமிருந்து பதிலைப் பெறவும் உள்ள நம்பிக்கையின் அடையாளங்களாகவும் அமைவதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

“கடந்த காலத்தை நினைவில் கொண்டு, எதிர்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற செய்தியை தாங்கியுள்ள கண்ணீர்களின் சோலை, போரினால் ஏற்பட்ட வலி, துயரம் மற்றும் பிளவுகள் மறக்கப்படாமலும் மீண்டும் நிகழாதவாறும் இருப்பதை உறுதி செய்யும் குடும்பங்களின் மற்றும் சமூகங்களின் கூட்டு உறுதியை பிரதிபலிக்கிறது.

கண்ணீர்களின் சோலை திறந்து வைக்கப்பட்டமையானது, ஒரு நினைவேந்தல் நிகழ்வாக மட்டுமல்லாமல், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாக்கும் உறுதியின் மீளுறுதிப்பாடாகவும், நினைவுகளைப் பேணுவதற்கும், உண்மை மற்றும் நீதியைத் தேடும் முயற்சியை தொடர்வதற்குமான அர்ப்பணிப்பாகவும் அமைந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்