நீர்கொழும்பு மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், சோம தேரரின் மரணம் மற்றும் பிக்குகள் படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் போதிதம்ம தேரர் முறைப்பாடு மனித உரிமை மீறல்கள் மற்றும் நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, போதிதம்ம மனித அகிம்சை சர்வதேச அமைப்பு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (04) முறைப்பாடுகளை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ் அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதிதம்ம தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் நீர்கொழும்பு மற்றும் மஹர ஆகிய இரு சிறைச்சாலைகளிலும் பாரிய மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பில் போதிதம்ம மானவிக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளது. குறிப்பாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை உரையாடுவதும் இல்லை.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு இதுவரை எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை. அரசியல் அரங்கிலும் இது குறித்து எவரும் குரல் கொடுக்கவில்லை. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. ‘சிறைக்கைதியும் ஒரு மனிதனே’ என்ற கூற்று வெறும் வார்த்தை அளவிலேயே எஞ்சியுள்ளது.
இச்சம்பவங்கள் அரசியல் மற்றும் சிறைச்சாலைகள் ஊடாக இடம்பெற்ற சதித்திட்டம் என உளவுத்துறையினர் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. நாட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னரே தகவல்களைக் கண்டறிவதே உளவுத்துறையின் பொறுப்பாகும். அதை விடுத்து, எம்மைப் போன்ற சமூக சேவை அமைப்புகளையும் அதிகாரிகளையும் பின் தொடர்வது அவர்களின் வேலையல்ல. வடக்கிலும் கிழக்கிலும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் சூழல் உள்ள நிலையில், உளவுத்துறையினர் அரசியல்வாதிகளின் பாதுகாப்பை விடுத்து நாட்டு மக்களின் பாதுகாப்பிலேயே கவனம் செலுத்த வேண்டும்.
நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைச் சம்பவங்கள் தவிர, அமரத்துவடைந்த கங்கொடவில சோம தேரரின் மரணம் குறித்தும், 1988 – 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது தேசிய பிக்குகள் முன்னணி அமைப்பின் 722 பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதியால் பயன்படுத்தப்படாத ஜனாதிபதி மாளிகைகளில் இடம்பெற்றுள்ள நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அடுத்த 7 முதல் 14 நாட்களுக்குள் விசாரணைகளை ஆரம்பித்து, அதன் முன்னேற்றங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என எழுத்துப்பூர்வமாகக் கோரியுள்ளோம்.
சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கழிப்பறை வசதிகள், சுகாதாரச் சூழல் மற்றும் உண்ணத் தகுந்த உணவு என்பன மறுக்கப்பட்டு, கைதிகள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான மனித உரிமை மீறல்கள் தொடரும் போது, அதற்குப் பொறுப்பான சிறைச்சாலைகள் அமைச்சர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாகப் பதவிகளைத் துறக்க வேண்டும்.
நாட்டின் தற்போதைய ஆட்சியில் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்து வருகிறது. நீதித் துறை, சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஊடகங்கள் மீதான அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக கே.டி. லால் காந்த போன்ற நபர்கள் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது கண்டிக்கத்தக்கது. அரசாங்கம் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தாமல், எதிர்காலச் சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனநாயக நெறிமுறைகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.





