பணம் தூயதாக்கல் உள்ளிட்ட மூன்று திருத்தச் சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை!

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை சபாநாயகர்   ஜகத் விக்கிரமரத்ன செவ்வாய்க்கிழமை (04)  சான்றுரைப்படுத்தினார்.

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக (14ஆம் உறுப்புரைக்கு) விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதுடன், நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி 2026.07.09 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக, பணம் தூயதாக்கலைத் தடுப்பதற்குத் தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டக்கட்டமைப்பு வலுப்படுத்துவது, நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைவினைத்திறன்மிக்கதாக முன்னெடுப்பதும், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக இலங்கையின் சட்டக் கட்டமைப்பை நவீனப்படுத்துவது என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.இதற்கமைய, பணம் தூயதாக்கல் குற்றங்களின் நோக்கெல்லையை விரிவுபடுத்துதல், அடிப்படைக் குற்றம் தொடர்பில் குற்றவாளியாகத்தீர்ப்பளிக்கப்படாத நிலையிலும் பணம் தூயதாக்கல் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்தல்,சந்தேகத்திற்கிடமான சொத்துக்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைக்கும் உத்தரவுகள் மற்றும் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் செயன்முறையை வலுப்படுத்துதல் ஆகியன இத்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும்.

அத்துடன், தடுத்து வைக்கப்பட்ட சொத்துக்களை முகாமைத்துவம் செய்தல்மற்றும் அகற்றுதல், குற்றச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், விசாரணை அதிகாரங்களை விரிவுபடுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பணச் சலவை குற்றத்திற்கான தண்டனைகளை அதிகரித்தல்ஆகியவற்றுக்கான புதிய ஏற்பாடுகளும் இச்சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் இலங்கையில் பணம் தூயதாக்கதலைத், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுப்பது மற்றும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பது தொடர்பான சர்வதேச தரநிலைகளுடன் இணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்)சட்டமூலத்தின் மூலம், 2005ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமாவய (திருத்தச்) சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுவதுடன், இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குவதற்கான தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திருத்தங்களின் மூலம், பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான இலங்கையின் சட்ட நடவடிக்கைகள் சர்வதேச தரநிலைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயங்களுக்கு அமைவாக மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. அத்துடன், எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்குத் தயாராகுவதற்கும் இது உதவியாக அமையும்.

சமீபத்திய செய்திகள்