அக்கரைப்பற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற சாரதிகள் கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை வீதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் ரக வாகனங்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, கடந்த திங்கட்கிழமை (03) அப்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றிய அதிரடிப்படையினர், அவற்றைச் செலுத்தி வந்த இரண்டு சாரதிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகளையும் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.