உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீஸார் இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை போலீஸார் அழைத்துச் செல்வதற்கு முன்னதாகவே, கைது சூழல் நிலவுவதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செயப்பட்டது. அது இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராயினர்.

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், “உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. அது கைதுக்கு முந்தைய நடவடிக்கை தான். அவரை தஞ்சை போலீஸார் விசாரித்து முடித்ததும் விடுவிப்பர்,” என்றார்.

அப்போது நீதிபதி இளந்திரையன், உதயநிதியை இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், அதேவேளையில் உதயநிதியும் காவல் துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நடந்தது என்ன?

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சட்டப்பிரிவுகள் 196, 192, 352, 79, 296(பி), 61 மற்றும் 351(2) பிஎன்எஸ், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் (The Tamil Nadu Prohibition of Harassment of Women Act) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 67, அதாவது பாலியல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது வீட்டுக்கு தஞ்சை போலீஸார் வந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவானதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தில் காவல்துறையினர் உதயநிதியை அழைத்துச் சென்றனர். இதனால் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோலவே, தவெகவினரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் இன்றைக்குள் விடுவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.