அட்டன் – டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட அட்டன் நகரில் வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருந்த சில தற்காலிக கடைகளை அகற்றுவதற்காக நகர சபை அதிகாரிகள் சென்றபோது, கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (20) திங்கட்கிழமை பதற்றநிலை ஏற்பட்டது.
அட்டன் நகரின் சில பகுதிகளில் வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அவற்றை அகற்றுமாறு அட்டன்–டிக்கோயா நகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எனினும், நகரில் பல இடங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்ந்தும் இயங்கி வரும் நிலையில், தெரிவு செய்யப்பட்ட சில கடைகளை மட்டுமே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நகர சபைத் தலைவர் சட்டத்தை பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக அமுல்படுத்த வேண்டும் எனவும், நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளுக்கும் எதிராக ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அட்டன்–டிக்கோயா நகர சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர கவனம் செலுத்த வேண்டும் எனவும், நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டமைப்புகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



