அனில் ஜயந்த பெர்னாண்டோ பெயரில் பரவும் தகவல் பொய்யானது – தொழில் அமைச்சு!

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரை பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் போலியான செய்தியாகும் என தொழில் அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.

தொழில் அமைச்சினால் திங்கட்கிழமை (20) விடுக்கப்பட் அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவின் பெயரைப் பயன்படுத்தி பௌத்த மத யாத்திரைக்கான தம்பதிவ பயணம் மற்றும் தாய்லாந்துக்கான ஆன்மீகச் சுற்றுப்பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக சமூக ஊடகங்களின் ஊடாக மிக மோசமான முறையில் அப்பட்டமான பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போலிப் பிரசாரமானது நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் ஒரு சதியாகும். பொதுமக்களை திசைதிருப்பி தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்படும் இத்தகைய கீழ்த்தரமான போலிப் பிரசாரங்களை தொழில் அமைச்சு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் அருவருப்பையும் தெரிவித்துக் கொள்கிறது

அமைச்சரினால் இவ்வாறானதொரு கருத்து வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் சோடிக்கப்பட்டவை. அமைச்சர் ஒருபோதும் அத்தகையதொரு கூற்றை வெளியிடவில்லை. குறிப்பாக இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பின்தொடரும் சில குழுக்களினாலேயே இந்த வதந்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.