இலங்கையில் 500 மில்லியன் கனேடிய டொலர்களை முதலீடு செய்த தயார்

அடுத்த பத்து வருடங்களுக்குள் இலங்கையில் 500 மில்லியன் கனேடிய டொலர்களை முதலீடு செய்வதற்குத் தாம் எதிர்பார்த்திருப்பதாக கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் அதன் பணிகளை ஆரம்பித்து சுமார் 5 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அதன் நோக்கம் மற்றும் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) கொழும்பிலுள்ள கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்துரைக்கையிலேயே அதன் ஸ்தாபகரும், இயக்குநர் சபை உறுப்பினருமான மொஹமட் ஹமீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கனடா மற்றும் இலங்கைக்கு இடையிலும்,  பரந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்திலும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் மூலோபாய வர்த்தக கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான தளமாகவே கனேடிய – இலங்கை வர்த்தக சம்மேளனம் நிறுவப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேபோன்று இவ்வமைப்பு நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வலுவான வணிக ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் பங்களிப்புச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி கனேடிய மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக வர்த்தகத்துறைத் தலைவர்கள், இராஜதந்திரக் கட்டமைப்புக்கள், அரச்ச நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் தமது அமைப்பு மிகநெருக்கமாகப் பணியாற்றும் எனவும் மொஹமட் ஹமீஸ் குறிப்பிட்டார்.